ஆயிரம் ஆயிரம் வீடுகள் இடிந்தன! ஆர்த்திடும் புயல்வீச்சினால்
அவர்களுக் குதவுவோர் ஆவன செய்கையில் அரசியல் பேசினார்கள்!
பாயும் இழந்தார்கள் பசியால் துடித்தார்கள் பல்லாயி ரம்பேர்களே!
பாசாங்குக் காரர்கள் படங்கள் எடுத்தபின்
பரிவின்றிப் பின்வாங்கினர்!
நோயோடு வாடினோர், தெருவில் கிடந்தனர், நொந்தே இருட்டில் வீழ்ந்தார்!
நொள்ளைச்சொல் சொல்லுவோர் வீண்வார்த்தை பேசியே நூறுகுற்றங் கூறினர்!
சாய்ந்திட்ட ஓர்லட்சம் மின்சாரக் கம்பங்கள், சரிந்திட்ட தென்னை பலவாம்!
சரிசெய்யும் முயற்சியில் சற்றும் இறங்காமல், ஜம்பங்க ளேபேசினர்! - 1
ஆர்த்தோடி வந்தோரே அலறித் துடித்தனர், அம்மம்மா என்ன செய்வோம்!
அரசேதும் செயவிலை. அதிகாரி இலையென்றே ஆர்ப்பாட்டம் செய்திட்டனர்!
ஓர்தென்னை தன்னையும் மின்கம்பம் ஒன்றையும் உருவாக்க, எத்தனைநாள்,
உழைப்பவர் எண்ணிக்கை இழப்பீடு எத்தொகை?
ஒன்றையும் எண்ணி டாமல்
நேர்முகப் பேட்டிகள், நெடுங்குற்றச் சாட்டுகள்
நித்தமும் செய்கிறார்கள்!
நிஜமாகத் துரும்பையும் எடுத்தீய மாட்டாமல்
நிழலாட்டம் போடுகின்றார்!
சீர்கேட்டை நீக்காத அரசியல் என்றேனும் செயலாற்ற முன்நிற்குமோ?
செயலாற்ற லில்லாத ஊமைகள் பேச்சினால்
சிறிதேனும் நன்மை வருமோ? - 2.
செல்வர்கள் தாம்சேர்த்த செல்வத்தை நன்மைக்கே
செலவழித் தின்பங் காண்பீர்!
சிறியவர் பெரியோர்கள் திரண்டோடி வந்துடன் சிறிதேனும் தொண்டு செய்வீர்!
நல்லநீர், மின்சாரம், நடுக்கந்தீர் போர்வைகள்,
நல்லுடை, அடுப்பு மற்றும்
நலிந்தோருக் குணவினை நாளும் வழங்கிடல் நம்முதற்கடமை யன்றோ?
சொல்வதைச் செய்பவன் முயற்சியால் துன்பங்கள்
தொலைதூரம் சென்றுவிடுமே!
துயர்நீக்க முயல்பவன் தொண்டனாய் ஆண்டவன்
துணையாகி முன்நிற்பனே!
அல்லல்கள் நீக்கநீர் ஆவதைச் செய்திடின்
செய்திடின் அடுத்துங்கள் புகழோங்குமே!
ஆரவாரச் சொல்லை அகற்றியே ஏழையர் அகமெலாம் வெல்லு வீரே! - 3.
அன்புடன் புலவர் இராமமூர்த்தி.
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.