புதியவை

உம்மா...நஸீமாஹமீட்உம்மா...
என் உயிரெங்கும்
ஓடிப் பிரவகிக்கும்
ஜீவநதி...
கவிதையில் கூட
அடக்க முடியா ஆழமாய்
எனக்குள் ஓடும் வற்றாத கடல் நீங்கள்....
கோடி பேரன்பையும்
கட்டிக் கடலில் போட்டாலும்
ஒரு துளி நேசத்தில்
உலகையே உள்ளங்கையில் வைத்துவிடும்
பேரதிசயம் நீங்கள்...
உங்கள் உயிர் பிரிந்த நொடியிலிருந்து
நெற்றிப் படிந்து நிமிரும்
ஒவ்வொரு சுஜூதிலும்
இந்த விழிகள் கழுவப்பட்டே
மீளெழும்புகிறது...
இலைகள் விழும் ஓசையில்

எறும்பொன்று ஊறும் சலனத்தில்
காற்றிலாடும் கிளைகளின் அசைவில்
எனைத் தேடுவது
உங்கள் பாதச்சுவடுகளா என
திரும்பிப் பார்த்து அழுத நினைவுகள்
ஏராளம் உம்மா...
நீங்கள் நடந்தால் புல்லுக்கும் வலிக்காது
பார்வையில் கூட பேரன்பை உதிர்க்கும்
வாடாத பூமரம் நீங்கள்....
பேரப் பிள்ளைகளுக்கெல்லாம்
சேலைத் தலைப்பில் நிழல் கொடுத்த
ஆலமரம் நீங்கள்...
பெற்ற பிள்ளை நான்
உங்களிடம் பெற்ற அன்புக்காய்
எதைப் பாடுவேன் என்னுயிரே....
ஒரு வருடம் என்பது நாட்கணக்குதான்
உங்கள் நேசத்தின் நீளத்திற்கு
உலகளவும் ஈடாகுமா....?
நான்
பாடப்புத்தகம் திறந்த நொடிகளிலெல்லாம்
விழிகளால் விழித்தே கிடந்த புத்தகம் நீங்கள்
நான் விழித்திருந்து படிப்பதற்காய்
விடிய விடிய தூக்கம் தொலைத்த
தொலைதூர சிந்தனையாளர்
நீங்கள் மட்டுமமேதான்...
உங்கள் தஸ்பீஹ் மணிகளிலும்
எழுத்தெண்ணி ஓதிய குர்ஆன் வசனங்களிலும்
விரவிக் கிடந்ததெல்லாம்
எங்களுக்கான பிரார்த்தனைகளே...
ஒவ்வொரு படித்த உம்மாக்களும் அறிந்திராத
வாழ்வின் கலை தெரிந்த
படிக்காத உம்மா நீங்கள்
என்றும் என் அனுபவப் பள்ளிக்கூடம்
நீங்களாகவே இருக்கிறீர்கள் உம்மா...
எங்களுக்காய் இழந்ததெல்லாம்
அல்லாஹ் இரட்டிப்பாக்கி தந்திடும்
அந்த பேரின்ப நாளிலே
உங்கள் முறுவலிக்கும் முகம் பார்த்து கொஞ்சிட
காத்திருக்கிறேன் தங்கமே...
அல்லாஹ் உங்களைப் பொருந்தி கொள்வானாக...

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.