புதியவை

ஒருவிகற்பமில்லா இனிய குடும்ப வெண்பா: (மீ.விசுவாதன்)


         
பெயர்த்தி:
துள்ளிக்  குதித்தோடும் தோகை மயிலாகப் 
பள்ளிக்குள் பாய்கிறாள் என்பேத்தி - வெள்ளிநிலா
அள்ளிவைத்த நல்லமுதாய் அன்பாகப் பேசுகிறாள்
முள்ளில்லா ரோஜா முகம்.
மகன்:
கள்ளம் கபடம் கயமை யிலாதநல்
உள்ள(ம்) அவனின் ஒளிர்குணம்  - பிள்ளையாய்
வள்ளலாய்ப் பெற்றதென் மாபெரும் புண்ணியம்;
வள்ளி மணாளனாய் வாழ்.
மருமகள்:
மருமகளா என்மகளா மாண்புள்ள பெண்ணா !
இருமகளாய்  நான்பெற்றேன்  இன்பம்  - பெருமை
ஒருகோடி தந்தாள் உயர்வாம் குணத்தால்
குருவருளால் காப்பாள் குலம்.
மகள்:
உதவும் கரங்களாய் உள்ள மகளை
உதவிடத்  தந்தான் ஒருவன் - நிதமும்
விதவித அன்பாம் விதையை மனத்தில்
முதலாக வைக்கின்ற முத்து  .

மனைவி:
பொல்லாத என்னுள் புகுந்த கலைவாணி ;
நல்லாள்நலம்சேர்க்கும் என்மனைவி - எல்லையெங்கும்
நெல்லாலே பேர்விளங்கும் நெல்லையைப் போலென்றும்
துல்லியமாய் நிற்பாள் துணிந்து.
அம்மா:
என்னைத்தான் சுற்றியே எத்தனை இன்பங்கள்
முன்னே  முதல்வனே செய்தனன் - என்னென்பேன்
அன்னையைப் போலொரு ஆளில்லை இங்கென்றே
இன்னமும் சொல்வேன் இனிது.
அப்பா:
எளிமையும்நேர்மையும்எப்போதும் நல்ல
நளினகுண நண்பனும் அப்பா - துளியும்
ஒளிக்காத  பொய்யிலா உத்தம ராக
ஒளிபெற்று வாழ்கிறார் உள்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.